TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தவெக காய் நகர்த்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் உள்ளாட்சி அளவில் வெற்றி பெறவே அனைத்து கட்சிகளும் ஆர்வம் காட்டும்.
காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்:
ஏனென்றால் உள்ளாட்சித் தேர்தலில் அதாவது கீழ்மட்ட அளவில் வலுவாக இருந்தால் மட்டுமே சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் கட்சி வலுவான வெற்றியைப் பெற இயலும். உள்ளாட்சி அளவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக வலுவாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் உள்ளாட்சி அளவில் இன்னும் வலுவாக வளர வேண்டிய கட்டாயம் உள்ளது.
தனது கட்சி நிர்வாகிகள் மூலமாக கட்சியை வளர்ப்பதற்காக கீழ்மட்டத்தில் தவெக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறது. அதேசமயம், மற்ற கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும், மாற்றுக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்களை உள்ளாட்சி அளவில் தங்கள் பக்கம் ஈர்க்க தவெக காய் நகர்த்தி வருகிறது.
கும்பல் கும்பலாக சேரும் அதிமுக:
தற்போது தவெக-விற்கு அதற்கு ஏற்ற கட்சியாக மாறியிருப்பது அதிமுக. திமுக-விற்கு சரிசம போட்டியாக திகழ்ந்து வரும் அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதளபாதாளத்திற்கு ஒவ்வொரு தேர்தலிலும் சென்று வருகிறது. குறிப்பாக, இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிய விவகாரத்தில், இபிஎஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை பறித்துவிட்டார்.
தற்போது பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் ஐக்கியமாகிய நிலையில், அவருக்கு எதிராக திரும்பியவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப்பதவியை வழங்கவில்லை. இதனால், இனி அதிமுக-வில் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த அதிமுக-வின் அதிருப்தி நிர்வாகிகள் கும்பல், கும்பலாக தவெக-வில் இணைந்து வருகின்றனர்.
பணிகள் தீவிரம்:
தவெக-வில் இணையும் அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல பொறுப்புகளையும், பதவிகளையும் குறிவைத்து வருகின்றனர். அதேபோல, தவெக-வும் இவர்களை வரும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர்களது அனுபவம் தேர்தலுக்கு பயன்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக- அதிமுக-விற்கு சவால் தரும் வகையில் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று தவெக-வினருக்கு கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. இதனால், அந்தந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தவெக-வின் வெற்றிக்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், இதுபோன்று முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரும் தொடர்ந்து தவெக-வில் இணைவதால் கட்சி தொடங்கியது முதலே பணியாற்றி வரும் தவெக-வினர் சற்று கலக்கத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















