Minister Kamali: தமிழ்நாட்டின் இளம் மினிஸ்டர்.. தவெக MLA டூ அமைச்சர்.. யார் இந்த அவிநாசி கமலி?
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வலியை இனி யாருக்கும் தந்துவிடக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்பட விரும்புகிறேன் என அமைச்சர் கமலி கூறியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சவரையில் புதிதாக 23 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., கமலி பெயரும் இடம்பெற்றுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே 10ம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அவர் மட்டுமல்லாமல் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் கிடைத்துள்ளது. அதேபோல் 21 தவெக எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சராக பொறுப்பேற்றுளனர்.
எல்.முருகனை வீழ்த்திய கமலி
2026 சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தொகுதியில் கமலி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவின் இளம் வேட்பாளர் கோகிலமணியும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் களம் கண்டனர். ஆனால் இந்த தேர்தலில் கமலி சுமார் 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.
கமலியைப் பார்த்தால் ஒரு எம்.எல்.ஏ., என்ற தோற்றமே இல்லாமல் சாதாரணமாக நம்மில் ஒருவராக தெரிவார். சட்டமன்றத்தில் பதவியேற்புக்கு வந்தபோது கூட பலரும் அவரை பார்த்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியம் தெரிவித்தனர்.
கமலியின் பின்னணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் தான் கமலி. இவர் குருசாமிபாளையத்தில் இயங்கும் கல்வியில் கல்லூரியில் பி.எட் படித்தவர். அதேபோல் ராசிபுரம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
குடும்பத்தில் இருந்து யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. முதல்முறையாக அரசியலுக்கு நுழைந்த கமலிக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தார். அதைப் பயன்படுத்தி மக்களிடையே மதிப்பை பெற்று எம்.எல்.ஏ.வானார். அவருக்கு தற்போது அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய வெற்றி குறித்து பேசும்போது கூட, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வலியை இனி யாருக்கும் தந்துவிடக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்பட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். அவிநாசி தொகுதியைப் பொறுத்தவரை பல அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனை மாற்ற என்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
அவிநாசி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழாவில் அவர் வாசலில் எம்.எல்.ஏ. என்ற எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் கோலம் போட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதேபோல் அதேபோல் அன்னூர் AM காலனியைச் சார்ந்த மாணவி தர்ஷினி தேவி என்ற மாணவி கல்லூரியில் சேர போதிய கல்வி உதவித்தொகை இல்லாததால் MLA கமலியை சந்தித்து உதவி கோரி மனு அளித்தார் . அடுத்த 12 மணி நேரத்தில் மாணவி இந்துஸ்தான் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததும் பாராட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்




















