பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி எந்த ஒரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

Continues below advertisement

காவல்துறை விளக்கம்

இது குறித்து அறிவித்துள்ள காவல்துறை, கடந்த 23-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்ததாகவும், இதன் அடிப்படையில் அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) காமினி மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

நீதிமன்ற உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தல்

தொடர்ந்து விசாரணையின்போது புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.