விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பாதுகாப்பு பணி முடித்துவிட்டு இருசக்கரவாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற காவலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக வெற்றிக்கழக மாநாடு 27 ஆம் தேதி வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாட்டிற்கு முதல் நாளான 26 ஆம் தேதி விஜய் மாநாட்டு திடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் அருகேயுள்ள பாளையம் கிராமத்தை சார்ந்த காவலர் சத்தியமூர்த்தி என்ற காவலர் தனது பணியை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது சிந்தாமணி அருகே சத்தியமூர்த்தி காவலர் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த காவலர் அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள  மருத்துவமனையில் மாற்றம் செய்யபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காவலர் சத்தியமூர்த்தி உயிரிழந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து மதுராந்தகத்தில் வந்த சத்தியமூர்த்திக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி :-


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த திரு.சத்தியமூர்த்தி (வயது 27) (PC 1347) என்பவர் கடந்த 26.10.2024 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


காவலர் திரு.சத்தியமூர்த்தி அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர் திரு.சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 


திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு வந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சாலைக்கு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.