தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். பல வருடங்களாகவே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ரசிகர்களுக்கு மற்றொரு வேதனையான செய்தியையும் அறிவித்தார். அதாவது, அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 

Continues below advertisement

சினிமாவுக்கு குட் பை:

விஜய்யின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும், இதன்மூலம் ரசிகர்கள் வாக்குகளை அனுதாப முறையில் பெறுவதற்கான ஒரு முயற்சி என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது. மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

Continues below advertisement

வெற்றி வாய்ப்பு எப்படி?

கரூர் துயர சம்பவம் விஜய்க்கு ஒரு கரும்புள்ளியாகவே மாறியுள்ளது. தற்போது அவர் மீண்டும் தனது தீவிர அரசியலை மேற்கொண்டாலும் கூட்டணி, வேட்பாளர்கள் உள்ளிட்டவை பொறுத்தே விஜய்யின் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது. வலுவான கூட்டணி வைத்துள்ள திமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா பெருமைகளை கொண்ட அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக அரசியலில் குதித்துள்ள விஜய்யின் வெற்றி வாய்ப்பு என்பது மிக மிக குறைவு என்பதே தற்போதைய நிலவரம் ஆகும். 

விஜயகாந்த் போல நடிப்பாரா விஜய்?

ஒருவேளை 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டால் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விஜயகாந்தின் தம்பியாக தன்னை சித்தரிக்கும் விஜய், விஜயகாந்த் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை எட்டிய அளவிற்கு கூட வரமாட்டார் என்று சிலர் விமர்சிக்கின்றனர். 

2005ம் ஆண்டு தேமுதிக-வை விஜயகாந்த் தொடங்கினாலும், தீவிர அரசியலுக்கு பிறகும் சில படங்கள் நடித்தார். விஜயகாந்த் அரசியலுக்காக நிரந்தரமாக திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறாவிட்டாலும், பொதுமக்கள் பணிக்கு வந்துவிட்டால் முழு நேரமாக நடிக்கமாட்டேன் என்று ஒரு மேடையில் கூறியிருந்தார். 2006 தேர்தலில் தேமுதிக தனித்து நின்று தோல்வி அடைந்த பிறகு, விஜயகாந்த் சபரி, அரசாங்கம், மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி ஆகிய படங்களில் நடித்தார். 

தீர்மானிக்கப்போகும் தேர்தல் முடிவு:

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனது மகன் சண்முக பாண்டியனின் அறிமுக படமான சகாப்தத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார். 2016ம் ஆண்டு மக்கள்  நலக்கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்தபோது தமிழன் என்று சொல் என்ற படத்தை தொடங்கினார். ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. 

இதனால், தேர்தலின் முடிவுகள் ஒருவேளை தவெக-விற்கு எதிராக வந்தால் விஜயகாந்த் போல மீண்டும் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அவ்வாறு நடித்தால் அவரது ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடிப்பது குறித்து விஜய் எடுக்கப்போகும் முடிவு அவரது அரசியல் வாழ்வை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.