TVK Minister: தவெக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை யாருக்கு? காமாட்சியை டிக் செய்யப்போகும் விஜய்?
பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சியை தவெக ஆட்சியின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. யாருமே எதிர்பாராத வகையில் இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்றுள்ளது. தவெக இந்த தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் அதிகாரத்தை கோரியுள்ளது.
ஆட்சியமைக்க காத்திருக்கும் விஜய்:
காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில், விசிக, கம்யூனிஸ்ட்களின் ஆதரவை விஜய் எதிர்பார்த்து காத்துள்ளார். இந்த சூழலில், தமிழக வெறறிக் கழகத்தின் அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை யாருக்கு?
அதன்படி, பள்ளிக்கல்வித்துறையை காமாட்சி ஜெயகிருஷ்ணனுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் ஆவார். இவர் தனது பரப்புரையின்போது தொகுதியின் முக்கிய பிரச்சினைகள் மட்டுமின்றி கல்விக்கும் முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் உத்தரவாதம் அளித்திருந்தார்.
இவர் பள்ளிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் பல நலத்திட்ட உதவிகளையும் செய்தவர் என்று கூறப்படுகிறது. இதனால், இவருக்கு பள்ளிக்கல்வித்துறையை ஒதுக்கினால் அந்த துறையை திறம்பட செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. காமாட்சி பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 33 ஆயிரத்து 611 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 78 ஆயிரத்து 918 வாக்குகள் பெற்றார். 54 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையே போட்டியிட்ட தேர்தலிலே வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சர்கள் பட்டியல் தீவிரம்:
இது மட்டுமின்றி சுகாதாரத்துறை, சட்டத்துறை, நிதித்துறை, உயர்கல்வி போன்ற பல்வேறு துறைகளை யார்? யாருக்கு? என்ன துறைகளை ஒதுக்குவது? என்ற ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆதரவை நாடும் தவெக:
மேலும், ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரி இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய் தரப்பினர், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக-விலும் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















