தமிழ்நாட்டில் புதியதாக அமைந்துள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. 

Continues below advertisement

55 ஆயிரம் கோடி வருவாய்:

இந்த பட்ஜெட் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதித்துறை செயலாளர் சித்திக் கூறியதாவது,

மதுவகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரி, மதிப்பு கூட்டுவரி வாயிலாக இந்தாண்டில் 55 ஆயிரத்து 962 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தை ஆண்டில் ரூபாய் 51 ஆயிரம் கோடியாக இருந்தது.

Continues below advertisement

20 ஆயிரம் கோடி வருமானம் அதிகரிக்கும்:

நிதி நிலைமை இக்கட்டான நிலைமையில் உள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், நடப்பாண்டில் ரூபாய் 15 ஆயிரம் கோடி முதல் ரூபாய் 20 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். 

நிதி நெருக்கடியை சரி செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகை ரூபாய் 7 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. செலவு குறைப்பு, வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையால் இதுவரை 2 ஆயிரம் ரூபாய் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

கடனை குறைக்க முடியாது:

மேலும், அவர் பேசும்போது நடப்பாண்டில் ரூபாய் 1.22 லட்சம் கோடிக்கு கடன் வாங்கப்படும் என்றும், கடந்த 3 மாதங்களில் ரூபாய் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் என்றும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு கடனை குறைக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

விஜய் தலைமையிலான அரசு வருவாயை அதிகரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார். இந்த குழு தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது. 

வருவாய் பெருக்கக்குழு:

மான்டேக் சிங் அலுவாலியா குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் அடிப்படையில் விஜய்யின் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் முதன்மை வருவாய் மூலதனமாக இருப்பது மது விற்பனையே ஆகும். இந்த மதுவிற்பனை மூலம் வருவாயை வரிகள் மூலமாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியைக் காட்டிலும் மதுவகைகள் மீதான வரி மூலமாக ரூபாய் 4 ஆயிரம் கோடி மேலும் அதிகளவில் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கிறது.