TVK Vijay Condemn: ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் விஜய், ஆளும் கட்சியினரை கண்டித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.,

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை பாரிமுனை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சர்வே எடுக்க சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“தோல்வி பயத்தால் தவெகவினரை தாக்கும் ஆளும் கட்சியினர்“
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!“ என்று தெரிவித்துள்ளார்.
“முடிந்தால் என் மீது கை வையுங்கள்“ - ஆதவ் அர்ஜுனா
இதனிடையே, சிகிச்சை பெற்றுவரும் தவெக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் தங்களை பாக்காது என்றும், மக்களுடைய வீட்டிற்கு இன்னும் தைரியமாக செல்வோம் என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும், தலைவர் விஜய்யிடம் பேசியிட்டு, இதே நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் செல்வோம் என்றும், முடிந்தால் அமைச்சர் சேகர்பாபுவை தன் மீது கை வைக்கச் சொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அதோடு, திரும்ப திரும்ப கை வைத்தால், இளைஞர் படை உங்கள் வீடு தேடி வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும், அகிம்சை வழியில் பதிலடி கொடுப்போம் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.























