கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சிடிஆ நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, செந்தில் பாலாஜி மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

விஜய்யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார்

கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தவெக  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், அவர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இதனிடையே, கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி, புதிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவும் ரத்தாகியுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். அதன்பின்னர் சிடிஆர் நிர்மர்குமார் அளித்த பேட்டியில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.

Continues below advertisement

செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டிய சிடிஆர் நிர்மல்குமார்

கரூர் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், பாஜகவிற்கு தவெக அடிபணிந்துவிட்டது, பாஜக கூட்டணிக்கு செல்ல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது குறித்து சிடிஆர் நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இதற்கு முன் திமுக பல விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை கோரியுள்ளதாவும், அப்போது அவர்கள் மத்திய அரசின் கூட்டணியில் இருந்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார். ஒரு ஏஜென்சி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மதித்து செயல்பட வேண்டும் என கூறினார்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கொடுத்த உத்தரவை பொதுவெளியில் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் தான் அது குறித்து பேச முடியும் என்றும், அதற்காக தாங்கள் காத்திருந்ததாகவும், அதற்கான நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கரூர் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல்குமார், யார் அந்த வழக்குகளை தொடுத்தது என்று தெரியவில்லை என்றும், ஆனால் அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறினார்.

அதோடு, கரூரில் ஒவ்வொருவரும் மிரட்டப்படும் நிலை உள்ளதாகவும், பிறள் சாட்சி மன்னனாக இருக்கும் ஒரு வழக்கிற்கே சொந்தக்காரர் செந்தில் பாலாஜி என கடுமையாக விமர்சித்தார். அதனால் தான் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 50 பேரையே பிறள் சாட்சியாக மாற்றிய செந்தில் பாலாஜிக்கு, 4, 5 பேரை பிறளாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என அவர் கூறினார். அப்படி யார் மிரட்டினாலும், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும், அதை ரொம்ப நாட்கள் தள்ளிப்போட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தலைமறைவாக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் தற்போது வெளியே வந்து விஜய்யை சந்தித்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் நேற்று இரவு விஜய்யை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.