தவெக தலைவர் விஜயிடம், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேசியதாக வெளியான தகவல் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
தனித்தனியே குழு அமைத்து தீவிர விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 மாலை நடைபெற்ற தவெக தலைவர் விஜல் மக்கள் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியே குழு அமைத்து தீவிர விசாரணை நடத்துகின்றன.
இந்த சம்பவத்தில் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூகங்களுக்கு வழிவகுத்த ஆதவ் டெல்லி பயணம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விஜயிடம் பேசியதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனா நேற்று (அக்.1) மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆதவ் தரப்பில், அவர் அலுவல் பணிகள் மற்றும் அக்டோபர் 5-ம் தேதி உத்தரகாண்டில் நடைபெறும் 55வது சப் ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அவர் தேசிய கூடைப்பந்து சங்கத்தில் பொறுப்பு வகிப்பதாலேயே டெல்லி பயணம் செய்ததாக விளக்கம் தரப்பட்டது.
கரூர் மரண சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளும் விஜயைக் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
நான் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை
இந்த நிலையில் தவெக தலைவர் விஜயிடம், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேசியதாக வெளியான தகவல் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ’’எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு நான் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. நானும் பேச வாய்ப்பு இல்லை.
பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.