களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடக்க உள்ள நிலையில் பா.ஜ.க., தி.மு.க.விற்கு எதிராக வழிநெடுகிலும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடுமே உற்றுநோக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பும் எகிறுகிறது.
தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா:
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடக்கிறது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்பதாலும், தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டிற்குப் பிறகும் விஜய் தனது கட்சியினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பங்கேற்கும் நிகழ்வு என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்:
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இந்த பொதுக்கூட்டம் நடக்கும் வழியெங்கிலும் விஜய்யை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்யை வரவேற்று வாசகங்கள் இடம்பெற்றிருப்பதுடன், மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும், இன்றைய பொதுக்கூட்டத்தில் விஜய்யின் முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனி நாச்சியார் உள்ளிட்ட சில பிரபலங்களும் இன்று விஜய் முன்பு தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன பேசப்போகிறார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்காெடுமை குற்றங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் இன்று என்ன பேசப்போகிறார்? என்று பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சியினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். விஜய்யின் கட்சியில் சிடி நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகிய பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் காலை முதலே விஜய் ரசிகர்கள் பொதுக்கூட்டம் நடக்கும் ஹோட்டல் முன்பு குவிந்து வருகின்றனர். நடிகர் விஜய்யைப் பார்ப்பதற்காக அவர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.