அதிரடிப்படை எங்கே? - முதல்வர் விஜய் அறிவித்த திட்டத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட டிடிவி தினகரன்
முதல்வர் விஜய் அறிவித்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பெயரளவில் மட்டுமே இருக்கிறது - டிடிவி தினகரன்

முதலமைச்சர் விஜய் அறிவித்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்தவுடன் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து பல விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருச்சியில் மாணவி மீது காதலன் கொலை வெறித்தாக்குதல், திருவாரூர் செய்தியாளர் மீது போதை கும்பல் கொடூரமாக தாக்கியது, புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் என தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக ஆட்சியை போல, தவெகவின் ஆட்சியிலும் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதாக போன்ற விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















