தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

Continues below advertisement

 

காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.