திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் பள்ளி , கல்லூரிகளும், வர்த்தக நிறுவனங்களும் நிரம்பியுள்ளன.
இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 873 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் 5945 முறை வந்து செல்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் இப்பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த 30- தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஒரே சமயத்தில் 15 பேருந்துக்கள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறையும் ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதல் தளத்தில் உணவகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம் ஆகியவையும் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அப்துல் சமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியை துவங்கி வைத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசு பேருந்தின் படியில் நின்றவாறு பயணம் செய்தனர். இதை கூடியிருந்த பலரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் பேருந்து படியில் நின்றவாறு பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ...
அதுமட்டுமின்றி, அமைச்சர்களை பின்பற்றி திமுகவினரும் பஸ்ஸின் பின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர். சினிமாவாக இருந்தாலும், பைக் ஓட்டும் போது, விதிமுறையை மீறக்கூடாது என்று ஹெல்மெட் அணிந்து, வாகனம் ஓட்டும் இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள், படிக்கட்டில் பயணம் செய்து, போஸ் கொடுத்தது, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்