PM Modi To Trichy : பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி மூன்று நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், 20 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக 108 வைணவத் தளங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்காநாதரை தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விமான நிலையம் முதல் கோயிலுக்கு செல்லும் வழி முழுவதும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பிறப்பித்துள்ளார். தடையை மீறி ட்ரோன் அல்லது ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது.