பாலியல் ரீதியாக பெண்ணுக்கு தொல்லை

திருச்சியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சுமார் 25 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சென்னை பகுதியைச் சேர்ந்த சுமார் 35 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டு ஆபாசமாக தொட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. முதலில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் , பொது மக்கள் முன்னிலையில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அமைதியாக இருக்க முயன்றுள்ளார்.

Continues below advertisement

ஆனால் அந்த நபரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்ததால், உயிர் அச்சத்துடன் சாமர்த்தியமாக தனது செல்போன் மூலம் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து வந்த அந்த புகாரை அதிகாரிகள் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட சிங்கப்பெண் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சுற்றி வளைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை

இதையடுத்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே பெண் போலீசார் தயார் நிலையில் காத்திருந்தனர். குறிப்பிட்ட அரசுப் பேருந்து செங்கல்பட்டு புறவழிச்சாலையை வந்தடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் பேருந்திற்குள் ஏறிய சிங்கப்பெண் படை போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

Continues below advertisement

பின்னர் அந்த நபரை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய கந்தசாமி என்பது தெரிய வந்தது. மேலும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்தபோது, பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கந்தசாமி மீது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஓடும் அரசுப் பேருந்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான இளம்பெண், தைரியமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததும், அதற்கு சிங்கப்பெண் படை போலீசார் சில நிமிடங்களிலேயே பதிலளித்து குற்றவாளியை கைது செய்தது பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.