திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டிஆர்பி ராஜா எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும், திமுக அயலக அணி செயலாளராக மாநிலங்களவை எம்பி அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:


தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அவர்கள் அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, கழகத் தலைவர் அவர்களிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக திரு.டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., (எண். 1202, 6வது அவென்யூ, 'இசட்' பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040.) அவர்கள் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.




அயலக அணிச் செயரெளராக பணியாற்றி வந்த திரு.டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால்,கழக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 20-ன் படி அவருக்கு பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம்.அப்துல்லா, எம்.பி.ஏ., அவர்கள் (ரயில்வே ஸ்டேசன் ரோடு, ராஜகோபாலபுரம் அஞ்சல், புதுக்கோட்டை 622003) அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.


தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014ஆம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017ஆம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரின் பொறுப்புக்கு தற்போது டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண