கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தேவையான கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது என அமைச்சர் சிவ சங்கர் பேட்டியளித்துள்ளார்.
மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சென்னை பட்டினம்பாக்கம் பணிமனை திறப்பு விழா மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வழங்கினார். இதை தொடர்ந்து முதற்கட்டமாக 2 சாதாரண MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ இந்த ஆண்டு முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 1266 புதிய பேருந்துகளில் இன்னும் மீதமுள்ள பேருந்துகள் இரண்டு மாதத்தில் இயக்கப்படும்” என்றார்
கிளாம்பாக்கத்தில்தான் அனைத்து பேருந்துகளும் இயங்கும்:
அப்போது, ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதி இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. சி.எம்.டி.ஏ அனைத்து விதமான வசதிகளையும் ஆம்னி பேருந்துகளுக்கு செய்து கொடுத்துள்ளனர். மேலும் தேவைப்படுகின்ற வசதியை செய்து கொடுக்கவும் சி.எம்.டி.ஏ ஒப்புதல் கொடுத்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து தான் தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து கழகம் கோரிக்கை வைக்கிறது. முன்புதான் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் முன்பதிவு கோயம்பேட்டில் செய்யப்பட்டது. தற்போது முன்பதிவு முழுமையாக கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் செய்யப்படுகிறது. எனவே இனி பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது”என்றார்.
தொடர்ந்து, வருகின்ற 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் நகருக்குள் இயக்க கூடாது என வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்வி பதிலளித்த அவர், “அது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து கழகம், சி.எம்.டி.ஏ, காவல்துறை இணைந்து இன்று ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். SETC பேருந்துகள் இல்லாமல் மற்ற அனைத்து அரசு பேருந்துகளும் கிளாம்பாக்த்தில் இருந்து படிப்படியாக தொடங்கி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.
எலக்ட்ரிக் பேருந்துகள்:
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல்பாடு சிறப்பாக அமைய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் தொழிற்சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லா கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்கள் பணிக்கு வருகிறார்கள். மற்றவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள்.
தற்போது ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குதான் அதிக அளவில் காலி பணியிடங்கள் இருக்கிறது. அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, படிப்படியாக அனைத்து MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் கொண்டுவரப்படும். அடுத்த மாதத்திற்குள் 100 புதிய MTC பேருந்துகள் வாங்கபட உள்ளது. மேலும், எலக்ட்ரிக் பேருந்துகள் 100 வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பேருந்துகளில் நடத்துநர் அரசு துறை சார்ந்தவராக இருப்பார், பேருந்து சப்ளை செய்பவர்கள்தான் பேருந்தை பராமரிக்கும் பணியினை செய்வார்கள்” என்றும் தெரிவித்தார்.