பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து "கேடயம்" பாதுகாப்பு அரணை ஏற்படுத்தித் தரும் கரூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.


 


கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில்  கரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2013 படி அமைக்கப்பட்டுள்ள புகார் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.




இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி, வழக்கறிஞர் ராஜ்குமார், மறுவாழ்வு துறை சிறப்பு அலுவலர் லாரெட்டா, சமூக தொடர்பு அலுவலர் சாம் ஜெபதுரை, ஆந்திர பொறுப்பாளர் கிளமின்ட், அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் என ஏராளமான இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு பெண்கள் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சட்டப்படி தீர்ப்பதற்கான அமைக்கப்பட்ட குழுவினருக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.




பயிற்சி பெற்ற அதிகாரிகள் இதுகுறித்து  பல்வேறு சந்தேகங்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய விளக்கம் அளித்தனர் பயிற்சியாளர்கள். நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், உச்ச நீதிமன்றத்தால் 2013 ஆம் ஆண்டு பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்பதற்காக "விசாக"என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. தற்போது ஒன்பது ஆண்டுகள் ஆகியும் அது குறித்த விழிப்புணர்வு பலரிடமும் இல்லாமல் இருக்கிறது என்பது இங்கு பலரும் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.




எனவே, இது போன்ற ஒரு நிலையை இனி வராத அளவிற்கு ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் "கேடயம்" என்ற இந்த திட்டம் குறித்து அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து இது போன்ற சூழல்களில் அவர்களிடம் புகாரினை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.




அதேசமயம் இந்த சட்டத்தை தவறாக பிரயோகம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், நிச்சயமாக புகார் கூறப்படும் நபர் பாதிக்கப்படுவார். இதன் மூலம் உடன் பணியாற்றக்கூடிய மற்ற பெண்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் "கேடயம்" லோகோவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் திறந்து வைத்தனர்.