தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் அசோசியேஷன் நாளை ஒருநாள் பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல் வாங்காமல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கலால் வரியை குறைத்த மத்திய அரசு:
பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசலுக்கான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை சுமார் 9 ரூபாய் அளவில் குறைந்தது. கலால் வரியை குறைத்துள்ள நிலையில் வாட் வரியை குறைத்து இந்த வரி குறைப்பின் பலனை மக்களுக்குத் தரவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இந்த வரிக்குறைப்பால் தங்களது வருவாய் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த 2011க்குப் பிறகு மாற்றியமைக்கப்படாத டீலர் கமிஷனை மாற்றியமைக்கக் கோரியும் நாளை ஒருநாள் பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்போவதில்லை என்று தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டிருந்த கலால் வரியை குறைத்ததை முழு மனதோடு வரவேற்கிறோம். இந்த விலைக்குறைப்பானது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு இது ஒரு சிறந்த ஆறுதலளிக்கும் முடிவு. அதே நேரத்தில், எங்களிடம் ஏற்கனவே கலால் வரி கொடுக்கப்பட்டு கையிருப்பில் இருந்த பெட்ரோல் டீசல் மீதான தொகையை எடுக்க அனுமதிக்காமல், இந்த விலைக்குறைப்பு அறிவிப்பு முறையற்ற வகையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ஒரே நாளில் லட்சகணக்கான டீலர்களுக்கு லட்சகணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் தங்களுக்கான பங்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில், அது 2017ம் ஆண்டுக்குப் பிறகு மாற்றியமைக்கப்படாமலேயே இருக்கிறது. பெட்ரோல் , டீசல் விற்பனையில் எங்களுக்கானத் தொகை என்பது 2017ல் பெட்ரோல் விற்ற விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டபோது பெட்ரோல் விலை 60 ரூபாயாகவும், டீசல் விலை 52 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் விலை முன்பு இருந்ததை விட இரு மடங்கு உயர்ந்து 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.
மாற்றியமைக்கப்படாத தொகை நிர்ணயம்:
தற்போது இருக்கும் எரிபொருள் விற்பனையில் தங்களுக்கான பங்கிற்கான அமைப்பானது 2010-2011ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. தற்போதைய 2022-2023 ஆண்டிற்கு இந்த அமைப்பு காலவதியானது. இது மறு அமைப்பு செய்யப்படவேண்டும். இந்த கோரிக்கையை நாங்கள் நீண்ட நாள்களாக வைத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகளால் இது கண்டுகொள்ளப்படவே இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளால் டீலர்கள் பெருமளவு இழப்பை எல்லா நிலைகளிலும் சந்திக்க நேர்கிறது. அதிகரித்த பணி மூலதனத்தின் காரணமாக நாங்கள் அதிகம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் அதற்கான வட்டியும் மாதாமாதம் அதிகரிக்கிறது.
மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய இரண்டு தவணைகளில் உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்தன. இந்த திடீர் அறிவிப்பு டீலர்களை பெரும் நஷ்டத்திற்கு தள்ளியிருக்கிறது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்கிய பெட்ரோலியப் பொருள்களை, குறைவான விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அறிவிப்பை வெளியிடும் இடத்தில் இருக்கிறன. ஆனால், முறையற்ற முறையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தியிருப்பது பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்துவதற்கு தகுதியானவை.
ஒருநாள் புறக்கணிப்புப் போராட்டம்:
இதனால், மே 31ம் தேதி ஒரு நாள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல் வாங்காமல் புறக்கணிப்பு செய்யும் போராட்டத்தை பெட்ரோலியம் டீலர் அசோசியசன் முடிவு செய்துள்ளது. எனவே டீலர்கள் யாரும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மே 31ம் தேதி ஒருநாள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
பொதுவாக பெட்ரோல் பங்குகள் ஒருநாள் கையிருப்பு பெட்ரோலை வைத்திருப்பார்கள். 31ம் தேதி போராட்டம் அறிவிக்கிறார்கள் என்றால் ஜூன் 1ம் தேதி தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.