பருவமழை காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் தக்காளி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 45 லாரிகள் மட்டுமே தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழை தொடர்ந்தால், தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.