விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது.
இருந்த போதும் தொடர் மழை மற்றும் SIR பணி காரணமாக காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இதனையடுத்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், நவம்பர் 30 ஆம் தேதி வரை மத்திய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்தமாக 31.33 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 இலட்சம் விவசாயிகளால் 19.06 இலட்சம் ஏக்கர் காப்பீடு செய்திருந்தனர்.
பயிர் காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம்
விவசாயிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட 15 நாட்களில் மட்டும் சுமார் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. இதனால் கூடுதல் அவகாசம் வழங்கியும் காப்பீடு பதிவு செய்ய முடியாத நிலை உருவானது. அதே நேரம் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நில உரிமைதாரர்கள் தவிர. குத்தகைதாரர்கள். கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகளால் பயிர் காப்பீடு பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
இதனையடுத்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 1ஆம் தேதி தான் வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. எனவே பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், கடந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 இலட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.