தமிழ்நாட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கான ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம்(TANGEDCO) உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடி மின் நுகர்வோரின் தேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து ஸ்மார் மீட்டர் அமைக்கும் திட்டத்தை ரூ19000 கோடி மதிப்பீட்டில் செயல்ப்படுத்தப்படவுள்ளது.


இதையும் படிங்க: TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?


ஸ்மார்ட் மீட்டர் திட்டம்:


வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய  அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒரு மீட்டருக்கு சராசரியாக 900 ரூபாயை மானியமாக மத்திய அரசு வழங்க உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. 


 தமிழ்நாட்டில் உள்ள 38  மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் முதல் தொகுப்புக்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த விலையை குறிப்பிட்டு இருந்தது. 


டெண்டர் ரத்து :


இந்நிலையில், தான் இந்த  சர்வதேச டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO உத்தவிட்டுள்ளது. குறைவான தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தாலும் அந்த தொகை மின்சார வாரிய  பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் இந்த முதல் தொகுப்பில் 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் குறிப்பிடத்தக்கது.


அதானி சர்ச்சை:


ஏற்கெனவே கடந்த மாதம் அதானி மீது அமெரிக்காவில் சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் தமிழக அரசு சூரிய மின்சக்தியை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தது. 


இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரைவை வரை எதிரொலித்தது, அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்தாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின, இதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுத்து அதற்கான தெளிவான விளக்கத்தையும் சட்டப்பேரவையில் கொடுத்திருந்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார். 


இந்த நிலையில் தான் தற்போது அதானி நிறுவனம் எடுத்திருந்த ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.