சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழையால் சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வானிலை எப்படி?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசும். நாளை மறுநாள் முதல் வரும் 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில் எப்படி?
இன்றும், நாளையும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடலோரம் எப்படி?
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரியில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென் தமிழக கடலோர பகுதிகள், வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.