குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று 10 செமீட்டருக்கு மேல் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில், குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ஆரஞ்சு அலர்ட்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழைக்கு வாய்ப்பு:
நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாளை தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாளை (24-11-2025) தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்:
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.