தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்தது முதலே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய பிறகு கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்து வருகிறது. 

Continues below advertisement

சென்னையில் விடாத மழை:

இந்த சூழலில், தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முன்தினம் இரவு மெல்ல மெல்லத் தொடங்கிய மழை நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. மாலையில் சற்று இடைவேளை தந்த மழை மீண்டும் இரவு தொடங்கியது. அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

வாட்டி வதைக்கும் குளிர்:

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேகமூட்டமாகவும் காணப்படுவதாலும் குளிர் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு குளிரின் தாக்கம் இருந்து வருகிறது.  

Continues below advertisement

இந்த கடும் குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காலையில் பணிக்குச் செல்பவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்கின்றனர்.

மிக கனமழைக்கு வாய்ப்பு:

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், டித்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகிலே உள்ளது. இதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

அடுத்த 18 மணி நேரத்தில் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே காற்றழுத்த தாழ்வு நிலை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூரில் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து நகராமல் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மக்கள் அவதி:

மழை காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தி வந்தாலும் சில பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு மட்டுமின்றி டெல்டா மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இது மட்டுமின்றி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.