தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் படிப்புக்காகவும், வேலைக்காகவும் பலரும் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இவர்கள் விழாக்காலம் உள்ளிட்ட முக்கிய நாட்கள், தொடர் விடுமுறைகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை:


இந்த சூழலில், வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையுடன் நாளை அல்லது வரும் திங்களுடன் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டால் 3 அல்லது நான்கு நாட்கள் விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.


சிறப்பு பேருந்துகள்: 


இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 8ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் 8ம் தேதிகளில் 1,755 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில், நாளையும், நாளை மறுநாளும் 1030 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கத்தை விட கூடுதலாக 190 பேருந்துகள்  இந்த இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்தும் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


32 ஆயிரம் பேர் முன்பதிவு:


சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்தும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 315 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


நாளை முகூர்த்த நாள் என்பதாலும், நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும், அடுத்த நாள் ஞாயிறுக்கிழமை என்பதாலும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது வரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.


சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக விடுமுறை முடிந்த பின்பு மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.