பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை இயக்குநரக அறிக்கையில்,
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்விதக் கால தாமதமின்றி உடனடியாகப் பரிசீலித்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வுசெய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாகக் குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அண்மையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சாதிச் சான்றிதழ் இல்லாததால் நான்கு ஆண்டுகளாக கல்லூரிக்குச் செல்லாமல் தவித்து வருவதாக தங்களது துன்பத்தைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பழங்குடியின மாணவர்கள்
கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர், பகுதியில் பல ஆண்டு காலமாக வேட்டைக்கார நாயக்கர் என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு பழங்குடியினர் பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதன்காரணமாக 12 ஆம் வகுப்பு படித்து முடித்தும், ஒரு வருட காலமாக 4 மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் . அதேபோல் இந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 8 பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி கொண்டு இருக்கிறார்கள்.பல ஆண்டுகாலமாக இவர்கள் தொடர்ந்து சாதி சான்றிதழ்களை கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து திரிந்தாலும் இதுவரை அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. பழங்குடியினர் பிரிவு ஜாதி சான்றிதழ் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அரசின் இந்த உத்தரவு இவர்களைப் போன்ற எண்ணற்ற மாணவர்கள் தங்களது தடைபட்ட படிப்பைத் தொடர வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.