தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நோய் பரவும் அபாயங்களும் அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 

டெங்கு, ஃப்ளூ காய்ச்சல் பரவும் அபாயம்:

இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழையில் அதிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இக்காலங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு நோய்கள், ஃப்ளூ, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளது. எனவே, பாதிப்புகளைத் தடுக்க அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் இருப்பது அவசியம். 

Continues below advertisement

தயாராக இருங்கள்:

1. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பது அவசியம். 

2. தரைத்தளத்தில் இருக்கும் நோயாளிகளை முதல் தளத்திற்கு மாற்ற வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே புதிய நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். 

3. ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் விநியோக அமைப்புகளை ஆய்வு செய்து, அதன் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும். 

4. குறைந்தது 72 மணி நேரம் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு எரிபொருள் இருப்பதை உறுதி செயய வேண்டும்.

5. மருத்துவமனை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க, வடிகால்களை சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும். 

6. மின்சாரம் தடைபட்டால் போதுமான குடிநீர் சேமிப்பு, அவசரகால விளக்குகள், ஒயர்லெஸ் அல்லது மொபைல் போன் தொடர்பு வசதிகளை பவர் பேங்க்குகளுக்கு உடன் உறுதி செய்வது கட்டாயம்.

7. வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மற்றும் பிறந்த குழந்தைகளை இடமாற்றம் செய்வதற்கான வசதி, அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும். 

8. பொது விநியோக குடிநீரில் குளோரின் கலந்திருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

9. தேவைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்கன படுக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடாமல் பெய்யும் மழை:

தொடர் மழை காரணமாக அடுத்து வரும் 3 மாதங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகளவு பரவும் அபாயம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் தாக்கம் சற்று இருப்பதால் மழைக்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இதனால், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் ஆகும். குறிப்பாக, தேவையில்லாமல் மழையில் நனைவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை அணுக வேண்டும். 

இதுபோன்ற காலங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். இதனால், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் ஆகியோர்களை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.