TN Rain News LIVE: தொடரும் மழை.. சென்னையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..
Tamil Nadu Rain News LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கி உள்ளதால் திருவாரூர் ரயில்வே கீழ்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அழகிரி காலனி, கேடிஆர் நகர், நெய்விளக்கதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் சுற்றியுள்ள பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
10.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.
11.01.2024 முதல் 13.01.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 497 கனஅடியில் இருந்து 1400 கனஅடியாக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22 அடியை எட்டியுள்ளது. 25 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்தி அளவு 1000 கனஅடியாக உயர்ந்துள்ளது. 200 கனஅடியாக இருந்தது தற்போது 1000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதம் தொடங்கியும் வட கிழக்கு பருவமழை தொடரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அனேக இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது. மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, சின்னமலை, அடையாறு, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஓ.எம்.ஆர் சாலை, ஈசிஆர், பட்டினப்பாக்கம் என அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) 24, சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) 23,வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்) 22,திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) தலா 21, கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்), புவனகிரி (கடலூர் மாவட்டம்) தலா 19, மீனம்பாக்கம் (சென்னை மாவட்டம்) 18, நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கூடாரம் சரிந்து விழுந்தது.
சென்னையில் நேற்று காலை முதல் தற்போது வரை மழை பதிவாகி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் களத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கினால் மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 12.58 செ.மீ.(125.8 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுவையில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பிரசித்தி பெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் வளாகம் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பெய்து வரும் அதீத கனமழையால் சிறுவாடி - முருக்கேரி சாலையில் மழை நீரானது கடைக்குள் புகுந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் நீர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீருக்காக 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22.05 அடி நிரம்பியுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும் காரணமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
47 ஆவது சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று 08/01/2024 ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என பபாசி தலைவர்/ செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை 29 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராணிபேட், வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
Tamil Nadu Rain Alert LIVE Updates:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தனியார் வானியர் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. திருவாரூர், சீர்காழி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 200 மி.மீ வரை பதிவானது. இந்நிலையில் இன்று சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் கனமழை இருக்கக்கூடும். மேகக்கூட்டங்கள் டெல்டா மற்றும் பாண்டிச்சேரி அருகே நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும் மேகக்கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை பகுதியை நோக்கி நகரும். இருப்பினும் சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதேபோல், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகும்” என தெரிவித்துள்ளார். அதேபோல் வரும் வியாழன் வரை இந்த மழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டர்)
நாகப்பட்டினம் 167.0, காரைக்கால் 122.0, புதுச்சேரி 96.0, கடலூர் 93.0, மீனம்பாக்கம் (சென்னை) 43.7, நுங்கம்பாக்கம் (சென்னை) 40.3, எண்ணூர் (சென்னை) 92.0, வி.ஐ.டி (செங்கல்பட்டு) 53.5, விருத்தாசலம் (கடலூர்) 50.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 70.5, தரமணி (சென்னை) 47.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 46.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 10 ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -