அரசின் பொங்கல் பரிசுத்தொகை விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், முந்தைய காலங்களில் திமுக, அதிமுக சொன்னதன் ரீவைண்ட் இதோ.


இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வெள்ள நிவாரணமாக பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு ரூ.5,000 பரிசுத் தொகை வழங்க வேண்டும் என அண்மையில் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.


முன்னதாக திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் கடந்த டிசம்பர் மாதம் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ5,000 பணத்தையும் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 


இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து தேசியக் கட்சியினர், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் பொங்கல் பானையைத் தலையில் வைத்தும், உடைத்தும் நேற்று (ஜனவரி 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




நடந்தது என்ன?


முன்னதாக கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அதிமுக அரசு மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதைச் சுட்டிக்காட்டி திமுக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த முறை ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 


கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அதிமுக அரசு ரூ.2,500-ஐ பொங்கல் பரிசாக வழங்கியது. அப்போதெல்லாம் அதிமுக அரசின் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். ஆனால், பொங்கல் பரிசை மட்டும் உயர்த்தி 5 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருந்தன. 


அப்போது தேர்தலுக்கு 4 மாதங்களே இருந்ததால் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை எதிர்த்து நீதிமன்றப் படியேறினால், மக்களிடையே அதிருப்தி ஏற்படும் என்பதால், திமுக இதை லாவகமாகக் கையாண்டது. அதேநேரத்தில் அரசுப் பணத்தை, அதிமுக தேர்தல் சிறப்புப் பரிசு (!) ஆக மாற்றிக் காட்டிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தது.


அதற்காகப் பொங்கல் பரிசு கூப்பனை அதிமுகவினர் மக்களுக்குத் தரக்கூடாது, ரேஷன் கடை ஊழியர்கள்தான் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சாதகத் தீர்ப்பைப் பெற்றது. அதேபோல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் திமுக தடை பெற்றது. இந்த விவகாரத்தில் மக்களிடம் அண்ணா மீதும் ஆணையிட்டுச் சத்தியம் செய்தார் ஸ்டாலின்.




அண்ணா மீது ஆணையிட்ட ஸ்டாலின்!


வாலாஜா அனந்தலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்., ''கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றேன். ஆனால், அதை ஏற்க மறுத்து ரூ.1,000 கொடுத்தார்கள். இப்போது தேர்தல் வரப்போகிறது என்பதால் மக்களை ஏமாற்ற, பொங்கலுக்காக ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 


முதல்வர் பழனிசாமி, ரூ.2,500 பணம் கொடுப்பதை திமுக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். சத்தியமாக, அண்ணா மீது ஆணையாகச் சொல்கிறேன், பணம் கொடுப்பதை திமுக தடுக்க நினைக்கவில்லை. இது அரசாங்கத்தின் பணம் என்பதால் முறையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.




இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொங்கல் பரிசை வாங்கித் தந்ததே தாங்கள்தான் என்றும் திமுக போஸ்டரும் அடித்தது. இப்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது, ''திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி!'' என்று தெரிவித்து போஸ்டர் அடித்தார்.


இந்த சூழலில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும், கடந்த அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளாலும் தற்போதைய அரசு கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருவதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் பரிசுத்தொகை கிடையாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. 


'வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்'


எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழை, எளிய மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.


'பரிசுப் பணத்தைக் காணவில்லை'


அதேபோல அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொங்கலுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பணத்தைக் காணவில்லை என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.