சென்னையில் உள்ள அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை கொள்முதல் விலைக்கு விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பருப்புகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், விலையைக் கட்டுப்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டிலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக ஆளும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20 ஆம் தேதி மாவட்டம்தோறும்  அதிமுக சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். மேலும் கடந்த வாரம் உயர் அதிகாரிகளுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்திய முதலமைச்சர், மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 300 ரேஷன் கடைகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். அந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாடு அரசின் உணவுத்துறை சார்பில் இன்று முதல் இந்த விற்பனையானது தொடங்கப்படும் எனவும், துவரம் பருப்பு , உளுந்தம் பருப்புடன் தக்காளியும் சேர்த்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தக்காளி கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு ரூ.150க்கும், உளுந்தம் பருப்பு ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.  அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.  அரசின் இந்த நடவடிகைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.