CMBT TN Govt: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜுன் மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம்:
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையை தென்மாவட்டங்கள் வரை இணைக்கும், பிரதான போக்குவரத்து சேவை மையமாக இருந்தது. ஆனால் நகர்ப்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த தென்மாவட்டங்களுக்கான பேருந்துகளில் பெரும்பலானவை தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளுக்கான மஃப்சல் பேருந்துகள் மட்டுமே தற்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கி வருகின்றன.
காலி இடத்தில் வரப்போவது என்ன?
பேருந்து சேவை மாற்றப்பட்டதை தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலியான இடத்தை அரசு என்ன செய்யப்போகிறது என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது. வணிக நோக்கில் ஏதேனும் கட்டடங்கள் கட்டப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. லூலு மால் அமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அரசு தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி வருகிறார். அதிகரித்து வரும் மாசு மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்க இது உதவும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு சொன்ன விளக்கம்:
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “கோயம்பேட்டில் உள்ள 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் (CMBT) இடம் முறையாக பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நான்கு ஏக்கர் நிலம் பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தால் (MTC) பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள இடம் கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையங்களுக்கு மஃப்சல் பேருந்து சேவை முழுமையாக மாற்றப்பட்டவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் எவ்வாறு மாற்றுவது என வடிவமைப்பாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என விளக்கமளித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலியாக உள்ள இடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், குத்தம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 427 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 150 பேருந்துகளை கையாள முடியும். இங்கு பயணிகள் காத்திருப்பு பகுதி, உணவகம், 234 கார்கள் மற்றும் ஆயிரத்து 811 பைக்குகளை நிறுத்துவதற்கு ஏற்ப பார்க்கிங் வசதிகள் உள்ளன. இதுபோக, பரந்தூர் பாதை வழியாக மெட்ரோ இணைப்பும் இருக்கும் என கூறப்படுகிறது.
150 பேருந்துகள் இயக்கம்:
கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், வரும் ஜுன் அல்லது ஜுலை மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் 150 மஃப்சல் பேருந்துகளையும் குத்தம்பாக்கத்திற்கு மாற்ற மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருமழிசை அருகே அமைந்துள்ள குத்தம்பாக்கம் பேருந்து முனையம் பூந்தமல்லியில் இருந்து 8.5 கி.மீ தொலைவிலும், CMBT இலிருந்து 23.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேட்டிற்கு என்ன தொடர்பு?
புதிய பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தால் வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் TNSTC மற்றும் SETC பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். அதன் மூலம் கோயம்பேடு மஃப்சல் பேருந்து நிலையம் முழுமையாக காலியாகும். அதனை தொடர்ந்து புதிய திட்டங்கள் மூலம் கோயம்ம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.