Chennai New Orbital Ring Road Project: 2048 சென்னையின் விரிவான போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக திருத்தணி, அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்குச் சேவை செய்யும் புதிய சாலையை தமிழக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை சாலை திட்டங்கள்
சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய மிகப்பெரிய சாலை திட்டமாக சென்னை எல்லைச்சாலை திட்டம் (Chennai Peripheral Ring Road Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் - பூஞ்சேரி முதல் எண்ணூர் துறைமுகம் வரை அமைய உள்ளது. இந்த சாலை 132.87 கிலோமீட்டர் தூரத்திற்கு பத்து வழிச்சாலையாக அமைய உள்ளது. இந்த சாலை சுமார் ரூ.12,301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
வட்டார வட்டச் சாலை (Orbital Ring Road)
ஒருபுறம் இந்த சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஐந்தாவது வட்டார வட்டச் சாலை (Orbital Ring Road) அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதனால் சென்னை மாநகரம் விரிவடைவதை கருத்தில் கொண்டு, விரிவான போக்குவரத்துத் திட்டம் (Comprehensive mobility Plan) ஒரு பகுதியாக இந்த சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையும்.
எந்தப் பகுதியில் இந்த சாலை இணைக்கப்படும் ?
இந்த சாலை திட்டத்தில் மிக முக்கிய பகுதியாக, காஞ்சிபுரம் ஆரம்பத்தில் இருந்து சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் ராமஞ்சேரி பகுதியில் புதிய இணைப்பு உருவாக்கப்படும். இது செங்கல்பட்டு - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை ( NATIONAL HIGHWAY 132B), காஞ்சிபுரம் -திருத்தணி மாநில நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்பிட்டல் ரிங் ரோடு அமைக்கப்படும். இரண்டு சாலைகளும் 4 வழி அல்லது 6 வழிச்சாலைகளாக அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளுக்கு பரவலாக்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள் என்ன ?
இந்த சாலை அமைக்கப்பட்டால் திருத்தணி, அரக்கோணம், புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை திட்டம்
இந்த ஆர்பிட்டல் ரிங் ரோடு மட்டுமில்லாமல், சென்னை பெருநகர் போக்குவரத்தை கையாளுவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சென்னை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், விரிவான போக்குவரத்து திட்டம் ( CMP) மூலம் சுமார் 416 கிலோ மீட்டர் புதிய அதிக போக்குவரத்தை கையாளும் வகையில் தமணி சாலைகள் (arterial road) சாலைகளை அமைக்க முடிவு எடுத்திருக்கிறது. இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இணைக்க முடியும். அதேபோன்று விடுபட்ட இணைப்புகளும் இந்த சாலை மூலம் அமைக்கப்படும்.