தமிழக அரசின் முதலமைச்சர் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை, வதந்தி, போலி செய்திகளுக்கு எதிராக உண்மைச் செய்தியைக் கண்டறிவதற்காக உண்மை அறியும் குழுவை உருவாக்கியுள்ளது. எனினும் குழு திடீரென உருவாக்கப்பட்டதற்கும் அதன் திட்ட இயக்குநர் நியமனம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

அது என்ன உண்மை கண்டறியும் குழு? (Fact Check Unit)

 

நவீன சமுதாயத்தில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்தபிறகு, அனைவரிடத்திலும் தகவல் நுகர்வு கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால் போலி செய்திகளும் தவறான தகவல்களும் புற்றீசல் போலப் பல்கிப் பெருகி வருகின்றன. இதைத் தடுக்கும் வகையிலும் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகவும் தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்தது.

குழுவின் பணி என்ன?


 

உண்மை கண்டறியும் குழுவில் 80 பேர் இருப்பர். அவர்கள் அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் பொய் மற்றும் தவறான செய்திகளைக் கையாளும் பணியில் ஈடுபடுவர். இதற்காக Central Task Force  எனப்படும் மத்திய பணிக் குழு சென்னையில் உருவாக்கப்படும். பிற மாவட்டங்களில் இருந்து, தகவல் கையாளுகையில் ஈடுபடுவர். 

 

உண்மை கண்டறியும் குழுவுக்கு வரும் புகார்கள், செயல்படக்கூடியவை மற்றும் செயல்படக் கூடாதவை என்று இரண்டாகப் பிரிக்கப்படும். அரசின் சட்டம் மற்றும் காவல்துறைகளின் ஆலோசனைக் குழுவிடம் கலந்தாலோசித்து, அவை சட்ட நடவடிக்கைக்கு அனுப்பப்படும். பகுப்பாய்வுக்குப் பிறகு சரியான தகவல்கள், சம்பந்தப்பட்ட குழுவாலேயே ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ளது. 




குழுவுக்கு என்ன செலவீனம்?


 

உண்மை கண்டறியும் குழுவுக்கு ஒருமுறை ஆகும் செலவாக ரூ.1.42 கோடி நிதியை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஒதுக்க உள்ளது.  அதேபோல ஆண்டுதோறும் 3.55 கோடி ரூபாய் செலவீனம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் இயங்கும்.

எப்படி செயல்படும்?


 

உண்மை கண்டறியும் குழுவுக்கு திட்ட இயக்குநர் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவரின் கீழ் 80 பேர் செயல்பட உள்ளர். திட்ட இயக்குநர் நேரடியாக, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் இணைந்து பணியாற்றுவார். இந்த குழு குறித்து அரசு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், குழுவின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐயன் கார்த்திகேயன், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 

 

சர்ச்சை எழுவது ஏன்?




உண்மை கண்டறியும் குழு அவசியம்தான் என்றாலும் அதை அரசே உருவாக்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்மூலம் அரசுசார்பு செய்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, எதிர்க் கருத்துகள், உண்மையான விமர்சனங்கள் நசுக்கப்படும் என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. போலி செய்திகளைக் களைவதில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தன்னிச்சையாக செயல்படும் உண்மை கண்டறியும் குழுக்களுக்கு மானியம் உள்ளிட்ட உதவிகளை வழங்கலாமே என்று விமர்சனங்கள் கூறப்படுகின்றன.  

 

முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சசகம், தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில திருத்தங்களை (Intermediary Guidelines and Digital Media Ethics Code) கொண்டுவந்தது. இதன்மூலம் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, ஒரு குழுவை அரசே அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

 

எனினும் இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ’’உண்மை சரிபார்ப்புக் குழு எதன் அடிப்படையில் ஒரு செய்தி உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்கும். சில நேரங்களில் நீதிமன்றங்களால் கூட எது உண்மை? எது பொய்? என்று கூறமுடியாத நிலை உள்ளது. பிஐபியில் (பத்திரிகை தகவல் அலுவலகம்) ஏற்கெனவே உண்மை கண்டறியும் குழு இருக்கும் நிலையில் புதிதாக ஒரு குழு எதற்கு?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்த மேல் விசாரணை டிசம்பரில் விசாரணைக்கு வர உள்ளது. 

 

அதேபோல கர்நாடகாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையில்,  தகவல் சீர்குலைவு தடுப்புப் பிரிவு ( Information Disorder Tackling Unit) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக உண்மை கண்டறியும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

வெளிப்படைத்தன்மை எங்கே?


 

இந்த நிலையில், மாநில அரசு புதிதாக ஒரு உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதுவும் தேடுதல் குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணை அக்டோபர் 6ஆம் தேதி வெளியான நிலையில், 25 நாட்களுக்குள் திட்ட இயக்குநராக பிரபல உண்மை கண்டறியும் நிபுணர் ஐயன் கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுந்துள்ளது. 

 


 

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ’’உண்மை கண்டறியும் குழுவின் திட்ட இயக்குநர் நியமனம் குறித்து செய்தித் தாள்களில் சமூக வலைதளங்களில் விளம்பரம் வந்ததா, தேர்வு யார் மூலம், எங்கே, என்ன முறையில் நடந்தது? எத்தனை விண்ணப்பம் வந்தது? நியமனத்தில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டதா?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

அதேபோல, ’’உண்மை கண்டறியும் குழுவின் செலவீனங்களை சட்டப் பேரவையில் வைப்பதுதானே முறையாக இருக்கும்? முறையான சட்டசபை ஒப்புதல் பெறும் வரை கூடக் காத்திராமல், சில்லறை செலவீனங்களில் இருந்து செலவைப் பெற்று, அவசரமாகக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?’’ என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

 

உண்மை கண்டறியும் குழு எதற்கு?


 

இதற்கிடையே இதுகுறித்து சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறும்போது, ’’சமூக வலைதளங்களில் அறிவியல், சுகாதாரம், சாதி, மதம், ஆகியவற்றுக்கு எதிராக போலி மற்றும் வெறுப்பு செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு எதிராக உண்மை கண்டறியும் குழு பணியாற்ற உள்ளது. இதில் திட்டமிட்டு பொய்யையோ, வெறுப்பையோ பரப்பும் செய்திகளை மட்டுமே கண்காணிக்கப் போகிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றவும், மாநிலம் பற்றிய மோசமான பிம்பத்தை உருவாக்கவும் பணியாற்றும் அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு, ஒழிக்கப்படும். 

 


 

உண்மை கண்டறியும் குழுவின் பதவிக்கு பத்திரிகையாளராக இருந்தால் மட்டும் போதாது. தொழில்நுட்ப அறிவும் முக்கியம் என்பதால்தான் பொறியியல் அல்லது முதுகலை இதழியல் என்று தகுதி குறிப்பிடப்பட்டது. அதேபோல தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மின் ஆளுமை இயக்குநகரம், தனியார் அமைப்பு மூலம் தேவையான ஆட்களை நியமித்துக் கொள்ளலாம். அதன் சார்பில் திட்ட இயக்குநர் நியமனம், வெளிப்படைத் தன்மையுடனேயே நடந்துள்ளது’’ என்று தெரிவித்தன. 

 

எனினும் உண்மை கண்டறியும் குழுவுக்கு தன்னிச்சையான அதிகாரத்தை அளிப்பதன் மூலம், ஒருசார்பு செய்திகளுக்கு ஆதரவும், விமர்சிக்கும் எதிர் சார்பு செய்திகள் மீது சட்ட நடவடிக்கையும் பாயும். வழக்குப் பதிவு செய்யப்படும். இதன்மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும் என்று பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும், கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசு காதுகொடுக்க வேண்டியது அவசர அவசியம்.