Diwali Bonus 2025: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்- வெளியான அறிவிப்பு; தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா?
TN Govt Diwali Bonus 2025: ஊதியத்தில் 20 சதவீதம் வரை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை, போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு பொதுத் துறையின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊதியத்தில் 20 சதவீதம் வரை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை, போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் சுமார் 2.69 லட்சம் பேருக்கு போனஸ் வழங்க ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் இந்த போனஸ்?
தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்ச வரம்பு ரூ.21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி அனைத்து 'C' மற்றும் 'D' பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்.
எவ்வளவு தொகை?
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு அளிக்கபடும்.
அதேபோல நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிக பட்சமாக ரூ.16,800 வகை தீபாவளி போனஸ் பெற உள்ளனர். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை இரண்டும் சேர்த்து 20 சதவீதம் அளவுக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக. 8.33 சதவீதம் மிகை ஊதியமும் 11.67 சதவீதம் கருணைத் தொகையும் அளிக்கப்பட உள்ளது.






















