TN Govt July Month Debt: தமிழக அரசு தனது நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகக் கடன் பத்திரங்களை வெளியிட்டும் பல்வேறு வங்கிகளிடம் கடன் பெற்றும் வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 12,044 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது. மாநிலத்திற்கு வரி வாயிலாகவும், வரி அல்லாத இதர வழிகளிலும் வருவாய் கிடைக்கப்பெறுகிறது. மாநிலச் சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம், விற்பனை வரி, மாநில கலால் தீர்வை மற்றும் மத்திய அரசின் வரிப் பகிர்வு, மானியம் ஆகியவை அரசின் முதன்மை வருவாய் ஆதாரங்களாக அமைகின்றன.

Continues below advertisement

வருவாய் மற்றும் செலவினங்களின் தற்போதைய நிலை

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாத காலத்தில் அரசின் மொத்த வருவாய் 89,718 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் வரி விதிப்புகள் மூலம் கிடைத்த வருவாய் 82,566 கோடியாகும்; வரி அல்லாத வருவாயாக 4,070 கோடியும், மத்திய அரசின் மானியமாக 3,082 கோடியும் கிடைத்துள்ளன. ஆனால், இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவு 1.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக வருவாய் பற்றாக்குறை 25,267 கோடி ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வட்டி மற்றும் ஓய்வூதியச் செலவுகள்

அரசின் மொத்தச் செலவினத்தில் கணிசமான ஒரு பகுதி ஏற்கனவே பெற்ற கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கே பயன்படுகிறது. அந்த வகையில் வட்டிச் செலவாக 21,176 கோடி ரூபாயும், ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக 17,237 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. வரவை விடச் செலவு அதிகமாக இருப்பதால், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள அரசு தொடர்ந்து கடன் வாங்கி வருகிறது.

Continues below advertisement

கடன் சுமையின் வளர்ச்சி 

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசு வாங்கிய மொத்தக் கடன் 32,925 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஜூன் மாத நிலவரப்படி 20,881 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, ஜூலை மாதத்தில் மட்டும் வாங்கிய 12,044 கோடி ரூபாய் கடனால் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில், கடந்த 2025 – 26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் 85,876 கோடி ரூபாயாகவும், மொத்தச் செலவு 1.09 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தபோது வாங்கிய கடன் 30,956 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.