தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார். அந்த விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு புரோட்டோகால்படி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.



அதன்படி, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம்தான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்னணி வரிசையில் அவர் அமர இடம் அளிக்கவில்லையென்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.






பன்வாரிலால் புரோகித் ஆளுநராக பதவியேற்றபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் இடம் அளித்திருப்பது உள்நோக்கம் உடையது எனவும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



8-வது வரிசையில் அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி


ஆனால், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் யார் எங்கே அமருவது என்பது குறித்து முடிவு செய்து, இருக்கைகளை அமைப்பது ராஜ்பவன் தலைமைச்செயலகம்தான் என்றும், இதற்கும் தமிழ்நாடு அரசிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 ஆளுநர் பதவியேற்பில் இருக்கையை முடிவு செய்தது யார்..?


ஆளுநர் மாளிகையில் ஆளுநரை தலைமையாக வைத்து நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் யார் எங்கே அமர்வது, யாருக்கு எங்கே இருக்கையை தருவது என்பது குறித்து முடிவு எடுப்பது ஆளுநர் மாளிகையின் தலைமைச்செயலகம்தான். ஆனால், புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாக்களின் ஏற்பாடுகளை செய்வது முதல் இருக்கை அமைப்பது வரை எல்லாவற்றையும் முடிவு செய்வது தமிழ்நாடு அரசுதான்.



தமிழ்நாடு அரசின் ‘பொதுத்துறை’ சார்பில்தான் இதுபோன்ற விழாக்களுக்கான ஏற்பாடுகளும், இருக்கை அமைப்புகளும் செய்யப்படும். இதற்கெனவே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ’பொதுத்துறை’ (Public Department)  இயங்குகிறது. அதன்படி, தற்போதைய பொதுத்துறை செயலாளராக இருக்கும் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையிலும், Protocol அதிகாரியான அனு ஐ.ஏ.எஸ் முன்னிலையிலும் தான் ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆளுநர் பதவியேற்புக்கான அழைப்பிதழ் முதல் இருக்கை அமைப்பை முடிவு செய்தது வரை அனைத்தையும் முடிவு செய்தது தமிழ்நாடு அரசின் ‘பொதுத்துறை’தான்.  ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் தலைமைச்செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ்-சுடன் வந்து இருக்கைகள் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.


அதன்படி, ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் தமிழ்நாடு அரசே இடம் ஒதுக்கியுள்ளது. மூன்று பிரிவுகளாக போடப்பட்ட இருக்கை அமைப்பில் முதல் வரிசையின் இடது, வலது புற இருக்கைகளில் சபாநாயர் அப்பாவு, மற்றும் மூத்த அமைச்சர்களும், மற்றொருபுற முதல் வரிசையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த முதல் வரிசையில் ஆளுநர் தனிப்பட்ட முறையில் அழைத்திருந்த விருந்தினர்கள் அமர்ந்திருந்தனர்.


இரண்டாவது முதல் 7 வரிசை வரை புரோட்டோகால் படி அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். 8வது வரிசையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு கொறடா கோவி.செழியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.


9, 10, 12வது வரிசைகளில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் முறையே, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி, பாரிவேந்தர், கலாநிதி வீராசாமி, ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்டோருடன் பாமக சட்டமன்ற குழுத் தலைவரான ஜி.கே.மணியும் அமர்ந்திருந்தார். அதிமுக எம்.எல்.ஏக்களான கே.பி.முனுசாமி, தனபால், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு கடைசி வரிசைக்கு முன்னர் உள்ள இடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.



எனவே, இன்று நடைபெற்ற புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழா ஏற்பாடுகளை முழுக்க முழுக்க செய்தது தமிழ்நாடு அரசுதான். தமிழ்நாடு அரசின் ‘பொதுத்துறை’ சார்பில்தான் புரோட்டோகால்படி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தது தமிழ்நாடு அரசு தான் என்றும், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தனர்.