Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேசுவரம் -காசி ஆன்மிகப் பயண திட்டத்தை தமிழக அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் ஆன்மிக திட்டம்
தமிழக அறிநிலையத்துறை சார்பாக ஆன்மிக பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் ரூ. 4.64 கோடி அரசு நிதியில் 3,815 பக்தர்களும், ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் ரூ. 75 இலட்சம் அரசு நிதியில் 3,004 பக்தர்களும், புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் ரூ. 75 இலட்சம் அரசு நிதியில் 3,014 பக்தர்களும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்தில் ரூ. 1.19 கோடி அரசு மானியத்தில் 645 பக்தர்கள் என மொத்தம் ரூ. 11.13 கோடி அரசு நிதியில் 11,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ராமேஸ்வரம் - காசி ஆன்மிக சுற்றுலா
மேலும் முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ. 10,000/- லிருந்து தற்போது 30 ஆயிரமாகவும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 50 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 1 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை தொடங்கப்பட்டு 25 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒரு நபருக்கு ஆகும் செலவினத் தொகையில் 84 ஒரு பங்கு மட்டுமே பக்தர்களிடமிருந்து பெறப்படுகிறது.
602 பக்தர்கள் காசிக்கு பயணம்
இந்த நிலையில் தான் ஆன்மிகப் பயணங்களில் சிறப்பு வாய்ந்ததாக 60 வயது முதல் 70 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பயன்பெறுகின்ற இராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணம் திகழ்கிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பே 2022 23 ஆம் நிதியாண்டில் முதன்முதலில் 200 மூத்த குடிமக்களுடன் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டாக இன்றைய தினம் 602 மூத்த குடிமக்கள் இராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் மார்க்கமாக காசிக்கு செல்கிறார்கள். நாளைய மறுதினம் காசியில் தரிசனம் முடித்து, வருகின்ற 12ஆம் தேதி காலை இராமேசுவரம் திரும்புகின்றனர்.
602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப்பை
இந்த ஆன்மிகப் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில் துறையின் சார்பில் ஒரு இணை ஆணையர், 5 உதவி ஆணையர்கள், 45 அலுவலர்கள், 2 மருத்துவர்கள். 2 செவிலியர்கள் உடன் செல்கின்றனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இராமேசுவரம் -காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப்பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த ஆன்மிகப் பயணத்தில் மேற்கொள்கின்ற நபர்களுக்கு போர்வை. ஸ்சுவெட்டர், துண்டு. குடை, பிஸ்கட் பாக்கெட்கள், டூத் பிரஸ். பேஸ்ட், தேங்காய் எண்ணெய். எவர்சில்வர் தட்டு, குவளை உள்ளிட்ட 18 பொருட்கள் அடங்கிய பயண வழிப்பைகள் வழங்கப்பட்டன.





















