விபூதி வள்ளுவரை வணங்கும் முதல்வர் ஸ்டாலின்- அதிமுக பதிவால் சர்ச்சை- நடந்தது என்ன?
விபூதியுடன் வள்ளுவர்; வணங்கும் முதல்வர் ஸ்டாலின்- அதிமுக பதிவால் சர்ச்சை- நடந்தது என்ன?

விபூதி இட்டிருக்கும் வள்ளுவர் சிலையை, முதல்வர் ஸ்டாலின் வணங்கும் புகைப்படத்தை அதிமுக வெளியிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த புகைப்படம் போலியானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில், ’’ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம்! #விபூதி_வள்ளுவர்’’ என்று பதிவிட்டு இருந்தார். இதில், முதல்வர் ஸ்டாலின் வணங்கும் திருவள்ளுவர் சிலையில், அவரின் நெற்றியில் விபூதி பூசப்பட்டு இருந்தது.
அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
முன்னதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’முதலமைச்சர் ஸ்டாலின், லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (SOAS) உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்’’ என்று புகைப்படத்தோடு பதிவு வெளியாகி இருந்தது.
இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபூதியுடன் திருவள்ளுவர் - எடிட் செய்த படம் !
— TN Fact Check (@tn_factcheck) September 8, 2025
ஆதாரம் : https://t.co/aFZlqXySwp pic.twitter.com/8W6R9gCn6y
இதுகுறித்து என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’விபூதியுடன் திருவள்ளுவர் - எடிட் செய்த படம்!’’ என்று கூறி, முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவும் ஆதாரமாக இணைக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடு சென்ற முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ‘தமிழ்நாடு வளர்கிறது‘ (TN Rising) என்ற பயணத்தின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்றார். ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கடந்த மாதம் 30-ம் தேதி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அதன்பின் இங்கிலாந்திற்கு சென்ற அவர், அங்கும் முதலீடுகளை ஈர்த்த பின், இன்று (செப். 8) காலை சென்னை திரும்பினார்.






















