தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பண்ணை வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் சாணம் அள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் சில ஆண்டுகளில் முக்கிய தலைவராக இடம்பிடித்தவர் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அண்ணாமலை கர்நாடகாவில்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி. ஆக பணியாற்றினார். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் கடுமையான நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு பணிகள் ஆகியவற்றால் அவர் பொதுமக்களிடையே பெயர் பெற்றார். “கர்நாடகாவின் சிங்கம்” என்று ஊடகங்கள் அவரை அழைத்தன.
சமூகப்பணியில் முழுமையாக ஈடுபட வேண்டுமெனும் எண்ணத்துடன் 2019 ஆம் ஆண்டு அவர் காவல்துறையிலிருந்து தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அடுத்த ஆண்டே அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். வெற்றி பெறவில்லை என்றாலும், அவரின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021 ஜூலை மாதத்தில் பாஜக தேசியத் தலைமையால் அவர் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மாநிலம் முழுவதும் “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மக்கள் தொடர்புப் பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை, ஊழல் எதிர்ப்பு, இளைஞர் பங்கேற்பு, தேசிய ஒற்றுமை போன்ற தலைப்புகளில் பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்து வந்தார்.
தற்போது அவர் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து தனக்கென நேரத்தை ஒதுக்கி செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது பண்ணை வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாட்டு சாணத்தை அள்ளுவது போன்ற வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு Everything else - outside - is just noise! என்கிற ஆங்கில கேப்சனையும் பகிர்ந்துள்ளார்.