TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
TN DGP IPS Transfer: தமிழ்நாடு காவல்துறையில் சட்ட-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

TN DGP IPS Transfer: தமிழ்நாடு காவல்துறையில் குற்றப் புலனாய்வுத்துறை ஏடிஜிபி ஆக கே.சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்ட-ஒழுங்கு டிஜிபி மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் சட்ட-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த கே. சங்கர், குற்றப் புலனாய்வுத்துறை ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டாகியும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் சட்ட-ஒழுங்கு டிஜிபி பணியிடம் என்பது காலியாகவே இருந்தது. பொறுப்பு டிஜிபிக்களே அந்த பணியை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தற்போது சிறைத்துறை டிஜிபி ஆக தமிழ்நாடு அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஷ் குமார் அகர்வால் வருகை..
கடந்த ஓராண்டாக காலியாக உள்ள சட்ட-ஒழுங்கு டிஜிபி பதவிக்கு, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரான மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையில் சிறப்பு டிஜிபி ஆக இருந்த அவர், நேற்று மத்திய அரசின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவர் தமிழக காவல்துறையின் தலைமைப் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே இதுவரை பொறுப்பு டிஜிபி ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சிறைத்துறை டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்
பஞ்சாபை சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால் தனது 22வது வயதிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த அதிகாரியாக பொறுப்பேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து துணை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர், ஆயுதப்படை டிஜிபி என பல பொறுப்புகளில் தமிழ்நாட்டில் பணியாற்றியுள்ளார். இதுபோக சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவில் 10 ஆண்டுகள் பணியாற்றியதோடு, கடைசியாக எல்லை பாதுகாப்பு படை டிஜிபி ஆக செயல்பட்டு வந்தார். சென்னை கமிஷனராக இருந்தபோது போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களிடையே கவனம் ஈர்த்தார்.
அவரது இந்த நீண்ட கால பணி அனுபவம் தமிழ்நாட்டின் போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முடியும் என முதலமைச்சர் விஜய் நம்புகிறாராம். தமிழ்நாட்டின் எல்லைகளில் ஆய்வு மற்றும் சோதனைகளை தீவிரமாக்கி மாநிலத்திற்குள் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வியாபார மையங்களை கண்டறிந்து முடக்கவும், அதன் மூலம் மாநிலத்திற்குள் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் முடியும் என அரசு மகேஷ் குமார் அகர்வாலை தேர்வு செய்துள்ளதாம்.
தொடரும் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
தவெக தலைமையிலான அரசு அமைந்ததை தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் கூட 20-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்





















