TN Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதில் அரிசி மற்றும் சர்க்கர ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பான அற்விப்பு எதுவும் வெளியாகாததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதேசமயம் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் தகுதியான பலருக்கே பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தான், ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்குமே 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அனைத்து ரேஷன் அட்டையினருக்கும் பொங்கல் பரிசு:
அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கும் பணியை, முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பயனாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
பரிசுத் தொகுப்பை பெறுவது எப்படி?
இதையடுத்து இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாளான வரும் 12ம் தேதியும், ரேஷன் கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று, சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணை வெளியீடு:
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம் ஏற்படும் என்றும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்பத்தினர் பயனடைவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.