CM Stalin : இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று அறிவித்தது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பியது. குறிப்பாக, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அமைச்சர் ஒருவரை ஆளுநர் நீக்குவது அரிதிலும் அரிதான ஒன்று. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
”அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார்"
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், "இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உரிமை. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செய்வதோ முதல்வரின் முடிவுகளுக்கு உட்பட்டது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டுமே, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
"ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை"
”அமைச்சர் பதவியை நீக்க உத்தரவு தொடர்பாக அட்டார்னி ஜெனரலிடம் ஆலோசிக்கப் போவதாக ஆளுநர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீட்டுக்குப் பிறகு ஆளுநர் தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு கலாச்சாரத்தின்படி ஆளுநருக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அதற்கு உங்கள் சட்டவிரோத உத்தரவுக்கு பணிந்து போக வேண்டும் என்று அர்த்தம் இல்லை" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
அதிமுக ஆட்சி காலத்தில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. கைதை தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், நீதிமன்ற ஒப்புதலுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கி ஆளுநர் நேற்று உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், "செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை வெளியிட்ட அடுத்த சில நேரங்களிலே ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.