இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பின்னர் அது தொடர்பாக உரையாற்றிய அவர், மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்த, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசஃப்-ஐ தலைவராகக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

Continues below advertisement

உயர்மட்டக் குழுவின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விளக்கம்

இந்த உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் நாதநாதனும் இருப்பார்கள் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த உயர்மட்டக்குழு, மத்திய மாநில அரசுகளின் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளையும், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்யும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Continues below advertisement

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தற்போதைய விதிகளை, உயர்நிலைக்குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநில பட்டியலிலிருந்து, ஒத்திசைவு பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருன்மைகளை மீட்டெடுப்பது குறித்து வழிமுறைகளை பரிந்துரை செய்யும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்ற கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல் ஆகியவற்றை இந்த உயர்நிலைக்குழு பரிந்துரைக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

1971-ல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு, மத்திய, மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும் ஆராய்ந்து, அறிக்கைகளை இக்குழு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்நிலைக்குழு, இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளிலும், அரசுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.