தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு குட்டி வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். 


அந்த வீடியோவில் தமிழ்நாடு பெயர்மாற்ற விழாவில் அறிஞர் அண்ணா பேசியது இடம்பெற்றுள்ளது. அண்ணா பேசுகையில், “தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் என்பதைவிட இந்த பெயரை பெற்றிருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றப்பட்ட பெயரை நாம் திரும்ப பெற்றிருக்கிறோம். இந்த அரசு வந்தபிறகுதான் இந்த பெயர் பெறப்பட வேண்டும் என்று வரலாற்றில் இருந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார். 


தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என முடிக்கிறார். 






ஜூலை 18ஆம் தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 



தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டபோது அது என்ன தனி நாடா என்ற அச்சம் எழுந்தது. ஆனால் தமிழ்நாடு என்றால் தனி நாடு இல்லை. அது ஒரு நிலப்பரப்புக்கான பெயர் எனவும் மக்களின் உணர்வு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 


மெட்ராஸ் மாநிலமாக இருந்த சமயத்தில் 1957ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது ஒன்றாக இருந்த  ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடாக மொழியை கருத்தில் கொண்டு பிரிக்கப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. 


இதற்காக உண்ணாவிரத போராட்டம் இருந்து தனது உயிரையே விட்டவர் சங்கரலிங்கனார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. இதையடுத்து 1961 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர் முதலமைச்சராக இருந்தார். அவர் நிர்வாக ரீதியில் தமிழ்நாடு என பெயர் குறிப்பிட அனுமதித்தார். 


இதையடுத்து 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து அண்ணா தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ் மத்திய தலைமையும் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதுவே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.