முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைத்து அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ்நாடு மக்களுக்கு போனில் அழைத்து மக்களின் குறைகள் குறித்து கேட்டறியவுள்ளனர். இந்த திட்டத்திற்கு நீங்கள் நலமா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 6ஆம் தேதி முதல் அதாவது மார்ச் மாதம் 6ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை  முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கையில் பேசினார். 


நீங்கள் நலமா திட்டம்


இது தொடர்பாக அவர் பேசுகையில், “ வருகிற 6-ம் தேதி 'நீங்கள் நலமா' என்ற புதிய திட்டம் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.  இந்த திட்டம் மூலம் பொதுமக்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் கருத்து கேட்கப்படும். முதலமைச்சர், அமைச்சர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் மக்களை தொடர்பு கொண்டு கோரிக்கைகளையும் அவர்களின் கருத்துக்களையும் கேட்பார்கள். மக்களின் குறைகளை கேட்டு நிதி நெருக்கடியிலும், திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரிய விஷயம் அல்ல. அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதுதான் பெரியது. தமிழ்நாட்டுல் புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டது” என பேசினார். 



மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். 


தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பகுதியில், 13 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. புதிய கட்டிட கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 700 படுக்கைகளுடன் ரூபாய் 254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, மயிலாடுதுறையில் ரூபாய் 3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.