தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட வேண்டிய நிதியை வழங்கக்கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
பிரதமருடன் சந்திப்பு:
சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கிடவும், சமக்ரசிக்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்கவும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்திய கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை மெட்ரோ திட்டம்:
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் 50 சதவீத சம நிதியில் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை. இதற்காக தமிழ்நாடு அரசு பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை. இதையடுத்து இன்றைய சந்திப்பில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்கக்கோரி வலியுறுத்தினார்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி:
அதேபோல, பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சமக்ர சிக்ஷா (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசும் தமிழக அரசும் 60:40 சதவீதத்தில் நிதியை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரத்து 55.42 கோடி மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதில் 1,598.82 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரத்து 683 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்து ரூபாய் 2 ஆயிரத்து 107 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரத்து 584 கோடி ரூபாய் மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூபாய் 1871 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை சர்ச்சை:
புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் அதற்கான நிதியை தமிழக அரசிற்கு ஒதுக்காமல் மத்திய அரசு விடுக்காமலே வைத்து வருகிறது. 43 லட்சத்து 94 ஆயிரத்து 906 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கொண்டு இந்த திட்டத்திற்கான மத்திய அரசு வழங்க வேண்டிய எஞ்சிய நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வலியுறுத்தினார்.
தமிழக மீனவர்களுக்கு நிரந்த தீர்வு:
இந்த விவகாரம் மட்டுமின்றி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நீண்ட காலமாக இலங்கை கடற்படையினரால் சிக்கல் இருந்து வருகிறது. சமீபகாலமாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதும், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதும் இலங்கை கடற்படையால் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி தமிழகக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை.
இந்த சூழலில், 191 மீன்பிடி படகுகளை பிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படையினர், 145 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியதுடன், மீன்பிடி படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினார்.