தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்டந்தோறும் சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.


இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும், வெப்ப அலை இருக்கும் என்றும் இதனால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் கொடைக்கானல் மற்றும் உதகைக்கு படையெடுத்துள்ளனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் நல்ல வானிலை இருக்கும் கொடைக்கானலுக்கு தனிப்பட்ட பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.  மே 4-ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்ல இருக்கிறார். 40 தொகுதகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் குடும்பத்துடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 4-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4 ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.