TN Cabinet Change: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொன்முடி போட்ட குண்டு:
திமுகவின் மூத்த தலைவரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து மிகவும் கொச்சையாக பேசியதாக, கட்சியின் துணைப் பொதுச்செயலாளரின் பதவி பறிக்கப்பட்டது. கட்சியின் பதவியையே வகிக்க தகுதியில்லாதவர், தமிழ்நாடு அரசின் அமைச்சர் பதவியை மட்டும் வகிக்கலாமா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து வரும் 16ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இதனிடையே, பொன்முடி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இன்று காலையும் தனது வீட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மற்றும் திமுக ஐடி விங் செயலாளரான டிஆர்பி ராஜா உடனும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சரவையில் மாற்றம்?
இந்நிலையில் தான், தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பொன்முடி விவகாரம் தாண்டி மேலும் சில விவகாரங்களையும் கருத்தில் கொண்டு, திமுக தலைமை இந்த முடிவை எடுப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மத்திய மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்துவது, கொங்கு மாவட்டங்களில் சமூக ரீதியான வாக்குகளை அறுவடை செய்வது முக்கிய இலக்காக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றங்கள் வாக்கு வங்கியில் பலனளிக்கும் நோக்கில் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தெரிகிறது.
நயினார் நாகேந்திரன் தாக்கம்:
நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மத்திய மாவட்டங்களில் சற்று வலுவான நபராக திகழ்கிறார். தனிநபர் செல்வாக்கையும் கொண்டுள்ளார். இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் ஆவதோடு, அதிமுக உடனான கூட்டணியும் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாக்குகளை கவரும் நோக்கில், மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை மாவட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்திற்கு கூடுதல் கவனிப்பு:
அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜகவும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு கடும் சவாலை கொடுத்ததே கொங்கு மண்டலம் தான். அப்போதும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை அந்த சூழலை மாற்ற திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. அதன்படி, அமைச்சரவை மாற்றத்தின்போது, கொங்கு மண்டலத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மையினருக்கு வாய்ப்பு?
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மஸ்தானுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்கை கவரும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம். தற்போது தமிழக அமைச்சரவையில், நாசர் மட்டுமே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரே அமைச்சராக இருக்கிறார். சர்ச்சையில் சிக்கியுள்ள பொன்முடி நீக்கப்பட்டால், விழுப்புரம் மாவட்ட அமைச்சரவை பிரதிநிதியாக மஸ்தானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிளஸ் 4, மைனஸ் 4?
தமிழ்நாடு அமைச்சரவையை பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 35 பேர் இடம்பெறலாம். அதன்படி, தற்போது அமைச்சரவையில் முழுமையாக 35 பேர் உள்ளனர். அவர்களில் 4 பேர் செயல்பாடுகள் அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து நீகப்பட்டு, 4 பேருக்கு புதியதாக வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சிலர் வகித்து வரும் கூடுதல் இலாகாக்கள், புதியதாக சேர்க்கப்படுபவர்களுக்கு பிரித்து வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி, பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு, அன்புமணியின் தலைவர் பதவியை எடுத்துக்கொண்டது என, தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக உள்ளது. அதன் ஒரு அங்கமாக அமைச்சரவை மாற்றமும் விரைவில் நிகழலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.